Thursday, January 08, 2015

திமிர் கொள்ளுங்கள்! -​ம.செந்தமிழன்

வேலையிலிருந்து வெளியேற்றப்படுவோருக்காக.

அந்த ஆற்றில் நீந்த விரும்பினீர்கள். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டீர்கள். உணவு, பசி, காதல், காமம், ஓய்வு ஏதுமின்றி பயிற்சியில் ஈடுபட்டீர்கள். வாழ்க்கை எவற்றுக்காகவெல்லாம் வழங்கப்பட்டதோ அவற்றை எல்லாம் இழந்தாலும் அந்த ஆற்றில் நீந்திவிட வேண்டுமெனத் தீர்மானமாயிருந்தீர்கள்.

உங்களில் பலர் முறையாகப் பயிற்சி பெறும் முன்னர் பெற்றோராலும் உற்றாராலும் ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்டதுண்டு. பயிற்சிகளுக்காகவும் பிற முயற்சிகளுக்காகவும் அவர்கள் கட்டியிருந்த பணயத் தொகைகளை எல்லாம் மீட்டெடுக்க, உங்களை இவ்வாறு தள்ளிவிடுவது அவர்களுக்கு அவசியமானது.

அந்த ஆற்றின் ஆழத்தில் பணம் காய்ச்சி மரங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. மூழ்கி மூச்சடக்கும் கலையைக் கற்றுக் கொண்டால், பணம் பறித்துக் கொண்டே இருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. மேதைகள் என நீங்கள் நம்பிய எல்லோருமே இப்பேச்சைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

பல் முளைக்கும் காலத்தில் உங்கள் வாய்களுக்குள் அந்நியச் சொற்கள் திணிக்கப்பட்டன. அவற்றைச் செரிக்க முடியாமல் நீங்கள் திணறி வாந்தியெடுத்தபோதெல்லாம், 'இதுதான் கண்ணே அமுதம்' என அந்த வாந்தியே உணவாக ஊட்டப்பட்டது. இதேபோன்ற கழிவுகளைக் கலைகளாகக் கற்றுத் தரும் கல்விக் கூடங்களுக்குள் தள்ளிவிடப்பட்டீர்கள்.

'மழையே மழையே வா வா' எனப் பாட வேண்டிய பிள்ளைகள் நீங்கள், 'rain rain go away' எனப் பாடினீர்கள். காலையில் கஞ்சி குடித்து உடல்நலம் பேண வேண்டிய பிள்ளைகள் நீங்கள், பிரேக் ஃபாஸ்ட் எனும் பேரில் அந்நிய நாட்டுப் பண்ணைப் பன்றிகளுக்கும் மாடுகளுக்கும் வீசும் உணவைப் புட்டிகளில் அடைத்து உறிஞ்சினீர்கள். வியர்த்துப் புண் வந்தாலும் ஷூக்களைக் கழற்ற இயலாத கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உங்கள் இளம் பருவம். பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினால் தண்டனை எனும் அடிமைத்தனத்தை உங்கள் பெற்றோர் மிகுந்த பெருமிதத்துடன் உங்கள் மீது திணித்தார்கள். ஆசிரியரிடம் வாங்கிய அடியின் வேதனையைக் கூட தாய்மொழியில் அரற்றி வெளிப்படுத்தினால் பள்ளி வளாகங்களில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கழுத்தில் மாட்டப்பட்ட சுருக்குக் கயிற்றை 'டை' என்றார்கள். இந்த வெப்ப மண்டலத்தில் அது ஏன் எனக் கேட்டவர்களை எல்லாம் 'பரதேசிகள்' எனப் பறைசாற்றியது மூத்த தலைமுறை. பணம் காய்ச்சி மரத்துக்கு உங்களை அனுப்பி வைக்க ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பாலின உணர்ச்சிகள் முளைக்கும் பருவத்தில் நீங்கள் பணம் காய்ச்சி மரத்தை நோக்கி ஆற்றின் ஆழத்தில் நீந்திக் கொண்டிருந்தீர்கள். உங்களது இரவுகள் பணிமனைகளால் சூறையாடப்பட்டன. பெரும்பான்மைச் சமூகம் பகலில் உழைத்து, இரவில் இளைப்பாறியபோது நீங்கள் மட்டும் இரவில் விழித்துப் பகலில் மயங்கினீர்கள். உங்களுக்காகவே சாலைகள் சொகுசு வாகனங்கள் இரவின் அமைதியைக் கிழித்தவாறு மாநகரச் சாலைகளில் பறக்கத் துவங்கின. 
அருகிலேயே இருக்கும் தாய் சமைத்த உணவு அரிய பொருளானது. பல்லாயிரம் மைல்கள் கடந்து வரும் அந்நிய உணவு எளிதில் கிடைப்பதானது. நீங்கள் எதை உண்ண வேண்டும், எப்போது உறங்க வேண்டும், எந்த நீரைப் பருக வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்போது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் உங்களுக்கான உத்தரவுகளாக மாறிப் போயின. இவற்றை மீறவே முடியாத வகையில் நீங்கள் ஆற்றின் ஆழத்தில் ஆழ்ந்தீர்கள். அந்தப் பணம் காய்ச்சி மரம் காய்த்துக் கொண்டே இருந்தது. நீங்கள் பறித்துக் கொண்டே இருந்தீர்கள்.

எப்போதுமே ஆற்றுக்குள் இருந்துகொண்டு மீன் சமைக்க முடியாதல்லவா. நீங்கள் பறித்து வீசிய பணத்தைக் கரையில் நின்ற பலர் வாரி எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்தினர், நண்பர்கள், உங்கள் பிள்ளைகளின் கல்வி முதலாளிகள், உணவக முதலாளிகள், வீட்டு உரிமையாளர்கள், கடன் அட்டை நிறுவனங்கள், வாகன நிறுவனங்கள், இப்படி எண்ணற்றோர் நீங்கள் வீச வீச வாரி எடுத்துக் கொண்டனர். கடவுளையும் மன அமைதியையும் கம்பெனிப் பண்டமாக மாற்றிய குருமார்களும் அந்தக் கரையில்தான் நிற்கிறார்கள். மீதமிருந்த சேமிப்புகளை அவர்களின் காலடியில் நீங்களே சமர்ப்பணம் செய்தீர்கள்.

மூச்சை இழுத்துப் பிடித்தவாறு மீண்டும் ஆற்றில் குதித்தீர்கள். இனிக் கரையில் நிற்க இயலாது. கையிருப்புகள் கரைந்துவிட்டன. எவ்வளவு கொண்டு வந்து கொட்டினாலும் கரையில் நிற்கும் சமூகம் 'போதாது. இன்னும் கொண்டு வா' என்கிறது. எவ்வளவு ஆழத்தில் நீந்தினாலும், மூச்சு முட்டினாலும் பணம் காய்ச்சி மரம், 'போதாது. இன்னும் ஆழமாக நீந்தி வா…' என்கிறது. இந்த முரண்பாடுகளின் பின்னால் இருக்கும் சதிகளை விளங்கிக் கொள்ள முடியாத அப்பாவிப் பிள்ளைகள் நீங்கள், கரைக்கும் ஆழத்துக்குமாய் அலைந்து சோர்ந்தீர்கள்.

குழந்தைகளுக்குச் சோறூட்ட நேரமில்லை. அதற்கெனச் சில கடைகள் ஆற்றின் கரைகளில் விரிக்கப்பட்டன. மாதவிலக்கு உதிரம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் பணிமனைக்குச் செல்லத்தான் வேண்டும். ' என்னால் முடியாது' எனச் சொல்ல உங்களில் எந்தப் பெண்ணாலும் முடியாது. அடிவயிறு கதறினாலும் பிசைந்தாலும் குடைந்தாலும் நாவினிக்கப் பேச வேண்டியது பன்னாட்டுப் பண்பாடு. கரையில் காத்து நிற்கும் சமூகம் இதைப் பற்றியெல்லாம் கவலையுறுவதில்லை. உள்ளே இறங்கியவர்கள் வெறும் கையில் வந்துவிடக் கூடாது என்பதே அதன் ஒற்றைச் சிந்தனை.

ஊரே உங்களைப் பழித்துக் கொட்டியது. உங்களால்தான் எல்லாமே நாசமானதாக வீடுதோறும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. எவரெல்லாம் உங்களைப் பழித்தாரோ அவரெல்லாம் தம் பிள்ளையை உங்கள் ஆற்றுக்குள்ளேயே இறக்கிவிட இழுத்து வந்ததை நீங்களும் கண்டிருப்பீர்கள். உங்கள் பணிமனைகளில் ஆணுறைகள் குவியல் குவியலாக இருப்பதாகச் செய்திகள் பரவின.

கத்தரிக்காய்களின் விலை ஏற்றத்துக்கும் உங்கள் சம்பாத்தியத்துக்கும் நேரடியான தர்க்கச் சங்கிலி புனையப்பட்டது. சமூகம் தனது பேராசைக் கனவுகள் அனைத்தையும் உங்கள் மூளைக்குள் திணித்தது, தனது பாவங்களை எல்லாம் உங்கள் முதுகில் சுமத்தியது. 
வயது என்னவாக இருந்தாலும் நீங்கள் சிறு குழந்தைகள். அதனால் மட்டுமே, இவ்வளவு நெருக்கடிகளிலும் உங்களால் புன்னகைக்க முடிகிறது.
உங்களைப் பொறுத்தவரைக்கும் பணம் காய்ச்சி மரம் ஆற்றுக்குள் உள்ளது. கரையில் இருக்கும் எல்லோருக்கும் நீங்கள்தான் பணம் காய்ச்சி மரங்கள். ஒரே ஒரு மாதம் நீங்களாகப் பணத்தை உதிர்க்காவிட்டால், கரைச் சமூகம் உங்களையே உலுக்கிவிடும். பணப் பையில் இருக்கும் அட்டைகள், பையை ஊடறுத்துக் கைகளுக்குள் ஊடுருவி இரத்த நாளங்களை நேரடியாக உறிஞ்சத் துவங்கும். என் உடலெங்கும் இவ்வாறான தழும்புகள் ஒரு காலத்தில் ஏராளமாக இருந்தன என்பதால் உங்கள் வலியை என்னால் உணர முடியும்.
இப்போது உங்கள் நிறுவனங்கள் உங்களை வெளியேற்றும் ஆணைகளை அனுப்பிக் கொண்டுள்ளது. ஆற்றிலிருந்து வலுக்கட்டாயமாக வீசி எறியப்படுகிறீர்கள். அதற்கான காரணங்கள் ஆயிரம். படித்த சமூகம் காரணம் கூறுவதில் தேர்ந்தது. எல்லாவற்றையும் காரண காரியத்துடன் அணுக வேண்டும் என்பது அதன் தத்துவம். உங்களை ஆற்றில் இறங்க வைத்ததற்கும் காரணங்கள் இருந்தன. இப்போது வெளியே வீசுவதற்கும் காரணங்கள் உள்ளன. ஆகவே, நான் காரணங்களைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை. காரணங்கள் ஏமாற்றவல்லவை. முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அதற்கான காரணத்தைக் கூறி, அதையும் ஏற்கச் செய்ய முடியும். இதுதான் கல்விக் கூடங்களில் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது. 
அதிகப் பால் தரும் மாடுகளுக்கு முதலில் செயற்கைத் தீவனங்கள் தரப்பட்டன. கறவை அதிகரித்தது. அம் மாடுகளின் உடலுறவு தடுக்கப்பட்டு, ஊசி மூலம் விந்து செலுத்தப்பட்டது. இதன்வழியாகப் பிறந்த கன்றுகளின் பால் கறக்கும் வீரியம் அதிகமானது. உடலுறவுக்குக் காளைகள் தேவையில்லாமல் போனது. ஆகவே, அக் காளைகள் எல்லாம் இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. 
பால் கறவை எவ்வளவு அதிகமானாலும் சமூகத்தின் பேராசை அடங்கவில்லை. வழக்கமாக, பசுக்கள் தங்கள் கன்றுகளுக்கென கொஞ்சம் பாலை மடியில் ஏற்றி வைப்பதுண்டு. சமூகத்தின் பேராசை, இதற்கென ஒரு இயந்திரத்தை உருவாக்கியது. பசுக்களின் மடியில் இயந்திரத்தை வைத்துப் பாலை உறிஞ்சத் துவங்கினார்கள். பசுக்களின் கதறலை அந்த எந்திர ஓசை மறைத்தது. கன்றுகளுக்காகவே ஊறும் பசுவின் பாலை, கன்றுகளால் தீண்டவே முடியாத கொடூரம் நம் சமூகத்தினால் நிகழ்த்தப்படுகிறது.
மேலும் மேலும் பால் கறவை அதிகரித்தது. ஆனாலும் பேராசை அடங்கவில்லை. பசுக்களின் கழுத்தில் ஊசியைக் குத்தி அவற்றின் உடலில் உள்ள உதிரத்தைக் கூடப் பாலாக மாற்றும் அறிவியல் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது பசுக்களின் மடியை ஊட்டுவதற்குக் கன்றுகளே தேவையில்லை. பால் உற்பத்தி இப்போதும் பெருகிக் கொண்டுள்ளது.
இனிப் பசுக்களால் நீண்ட ஆயுளுடன் வாழவே இயலாது. குத்தப்படும் ஊசிகளாலும் ஊட்டபடும் தீவனங்களாலும் மறுக்கப்படும் இனச் சேர்க்கை உரிமைகளாலும் பசுக்கள் தளர்ந்து விழும் காலத்திலும் சமூகத்தின் பேராசை தளர்வதில்லை. இந்த நிலையிலும் அந்தப் பசுக்களைக் கறிக்கடைகளுக்கு அனுப்பி, பணம் சம்பாதிக்கிறது இச் சமூகம்.
ஈமு கோழிகளால் கோடிகள் கொட்டிய வரை, அவை அதிர்ஷ்டத்தின் குறியீடுகளாக விளம்பரம் செய்யப்பட்டது. ஈமுக்களை எவ்வளவு உலுக்க முடியுமோ அவ்வளவு உலுக்கிப் பணம் சேர்த்த சமூகம், இப்போது அக் கோழிகளைக் காட்டில் வீசுவிட்டு வருகிறது. ஒரு பிடி தானியத்தை வீசி அவற்றின் உயிரைக் காக்கும் சிந்தனை அவர்களுக்கு இல்லை. 'ஈமுக்களுக்குத் தீனி போட்டால் நாம் அழிய வேண்டியதுதான்' என்கிறார்கள் அனுபவசாலிகள்.
இதுதான் இந்தச் சமூகம். பணம் காய்ச்சி மரங்களைத் தேடி ஓடிய, அந்த ஆற்றில் மூழ்கத் தவித்த, அதற்காகவே படித்த, பாடுபட்ட குழந்தைகளே, நீங்கள் பசுக்களைப் போலவும் ஈமுக்களைப் போலவும்தான் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள்.

இப்போது உங்களுக்கான தேவை ஒன்றுதான். அது, 'திமிர் கொள்வது' எனப்படும். ஆம், அடங்காத் திமிர் உங்களுக்குள் ஊற வேண்டும். 'எந்த நிறுவனத்தையும் நம்பி நான் பிறக்கவில்லை. எந்த நிறுவனத்திற்கும் அடங்க நான் அடிமையில்லை' என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும். இந்தத் திமிர் உங்களை அச்சத்திலிருந்து மீட்கும். எப்போது அச்சம் இல்லாமலிருக்கிறீர்களோ அப்போது உங்களுக்கான பாதை உங்களுக்குத் தென்படும்.

இங்கே பாதைகள் ஏராளமாக உள்ளன. உங்கள் கடிவாளங்களை நீங்கள் கழற்றினால்தான் அவை தெரியும். 
எவ்வளவுதான் பழக்கினாலும் நாட்டுக் காளைகளை எவராலும் அடிமைப்படுத்த முடியாது. வளர்த்தவராக இருந்தாலும் ஜல்லிக் கட்டு விழாவில் காளை மாடு வீசி எறியும். ஊர்க் காடுகளில் திரியும் காளைகளைப் பிடிப்பது பல நேரங்களில் தற்கொலைக்குச் சமானமானது. காளை என்பது திமிலும் திமிரும் இணைந்த உயிர். காளையின் இந்தத் திமிர் உங்களுக்குள் ஊற்றெடுத்தால் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவதைக் கண்டுக் கலங்கமாட்டீர்கள்.

நமக்கென்று ஊர் உண்டு, நமக்கென்று பல தொழில்கள் உள்ளன, நமக்கென்று சொந்த புத்தி உண்டு, நமக்கென்று வாழ்க்கை உண்டு. மிக முக்கியமாக, நமக்கென்று நல்ல திமிர் உண்டு.

திமிர் கொள்ளுங்கள்!
ம.செந்தமிழன்

No comments:

Post a Comment

​Graphic Designer ​Opening in The Gameplay.

Opening in The Gameplay . Role: Graphic Designer Exp: 0-1yrs Loc: Bangalore Salary: Industry standard Joining date: Immediate Pleas...