Wednesday, April 26, 2017

டயஸ்போராவிற்கு உங்களை வரவேற்கிறோம்

டயஸ்போராவிற்கு உங்களை வரவேற்கிறோம்

இணைய உலகில் எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் நாள்தோறும் பெருகி வருகின்றன. மக்களும் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் தமது எண்ணங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

மின்னஞ்சல் குழுக்கள், வலைப்பதிவுகள், டுவிட்டர், டுவிட்லாங்கர், முகநூல், மீடியம், டம்ளர் எனப் பல்வேறு தளங்கள் நம் எண்ணங்களைப் பகிர உதவுகின்றன.

இவற்றுள் முகநூல் ஆரம்பம் முதல் பல்வேறு வசதிகளை அளித்து, சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகளில் முகநூல் நிறுவனம் உருவாக்கும் சிக்கல்கள் ஏராளம். நமது தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்பது, Free Basics போன்ற திட்டங்களால் இணையச் சமநிலையைக் குலைப்பது போன்ற பல செயல்களை செய்கிறது முகநூல் நிறுவனம்.

மென்பொருள் உலகின் எல்லாத் தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் முகநூலின் ஆதிக்கத்தில் இருந்து மக்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு செய்து, டயஸ்போரா என்ற கட்டற்ற சமூக வலைத்தள மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

நமது தகவல்கள் நமக்கே சொந்தம்.

இந்த டயஸ்போரா மென்பொருள் தனி ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல. இது ஒரு கட்டற்ற மென்பொருள். இதை யாரும் இலவசமாகப் பதிவிறக்கலாம். மாற்றங்கள் செய்யலாம். யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். நமது வீட்டுக் கணினியில், நமது சர்வரில் என எங்கும் நிறுவிக் கொள்ளலாம். நமது சர்வர் மூலம் நாம் பகிரும் தகவல்கள் நம்மிடம் மட்டுமே இருக்கும். வேறு யாரும் அவற்றை சொந்தம் கொண்டாட இயலாது.
முகநூல் அப்படி அல்ல. முகநூலில் நாம் பகிரும் தகவல்களும், புகைப்படங்களும், காணொளிகளும் முகநூல் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. எப்போது நினைத்தாலும் முகநூல் நிறுவனம் நமது ஆக்கங்களை நீக்கிவிடும்.

பரவலான மென்பொருள்

முகநூல் அதன் நிறுவனத்தின் சர்வர்களில் மட்டுமே நிறுவப் பட்டுள்ளது. டயஸ்போரா உலகெங்கிலும் உள்ள சர்வர்களில் நிறுவப்பட்டு பராமரிக்கப் படுகிறது. இவை pod எனப்படுகின்றன. இணையத்தில் எங்கு நிறுவப்பட்டாலும் இந்த pod கள் பிற pod களை தாமே கண்டறிந்து அவற்றுடன் இணைந்து ஒரே மென்பொருள் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் உங்கள் சொந்த pod, உங்கள் நண்பர்களின் pod, அல்லது இணையத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான pod களில் ஏதோ ஒன்று வழியாக இணைந்து உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

முழு சுதந்திரம்

சில சமூக வலைத்தளங்கள் உங்கள் கைபேசி எண்ணைக் கேட்டு உங்களை அடையாளப்படுத்துகின்றன. டயஸ்போராவில் இது போன்ற சிக்கல்கள் இல்லை. நீங்கள் முழுமையாக அடையாளம் காண இயலாதவாறு கூட உங்களை மறைத்துக் கொண்டு இயங்க முடியும்.

சிறப்புகள்.

1. பகிர்தல்
யார்யாருடன் உங்கள் ஆக்கங்களைப் பகிர்வது என்பது உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. #குறிச்சொற்கள்
# என்று ஒரு வார்த்தைக்கு முன் எழுதி அதைக் குறிச்சொல்லாக்கலாம். அதைக் கொண்டு தேடுவது மிக எளிது.
3. விருப்பம், பகிர்வு
பிறர் ஆக்கங்களை விரும்பலாம். பகிரலாம்.
4. @பெயர்
நண்பரின் பெயர் முன் @ சேர்த்து அவரை உரையாடலில் குறிப்பிடலாம். இது அவருக்கு அறிவிக்கப்படும்.
5. பிற சமூக வலைத்தளங்களுடன் இணைப்பு
நீங்கள் டயஸ்போராவில் எழுதுபவை பிற சமூக வலைத்தளங்களைப் போய் சேர ஏற்பாடு செய்யலாம். இதனால் உங்கள் ஆக்கங்கள் அங்கு உள்ளவர்களையும் சென்றடையும்.
6. அரட்டை
XMPP என்ற protocol மூலம் எந்த ஒரு அரட்டை மென்பொருள் வழியாகவும் டயஸ்போரா நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
7. கைபேசி
கைபேசியின் உலாவியில் எளிதாக அணுகலாம். செயலிகளும் உருவீக்கப்பட்டு வருகின்றன.
8. மொழியாக்கம்
கட்டற்ற மென்பொருள் என்பதால் உலகின் எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்து விடலாம்.
9. தொடர்ந்த மேம்பாடுகள்
Ruby On Rails என்ற நிரலாக்க மொழிக் கட்டமைப்பைக் கொண்டு உருவீக்கப் பட்டுள்ளது டயஸ்போரா. உலகெங்கும் உள்ள ரூபி நிரலாளர்கள் இணைந்து தொடர்ந்து புது வசதிகளை அளித்து வருகின்றனர்.

வாருங்கள். டயஸ்போராவில் பேசுவோம்.

உங்களுக்கு விருப்பமான டயஸ்போரா pod ஐத் தேர்ந்தெடுக்க இங்கு செல்க. அதில் ஒரு கணக்கு உருவாக்கி, பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து, அழைக்கவும்.
மென்பொருள் உலகில் நமக்கு விடுதலை அளிக்கும் கட்டற்ற மென்பொருட்களுக்கு யாவரும் எளிதில் தரக்கூடிய பங்களிப்பு, அவற்றைப் பயன்படுத்துவதுதான்.
வாருங்கள். டயஸ்போராவில் பேசுவோம்.

நான் பயன்படுத்தும் pod : http://diasp.in
எனது டயஸ்போரா கணக்கு : sivams@diasp.in

சில முக்கிய இணைப்புகள்.
https://joindiaspora.com/
https://podupti.me/
https://wiki.diasporafoundation.org/Choosing_a_pod

Success is not counted by how high you have climbed but by how many people
you brought with you. - Wil Rose

No comments:

Post a Comment

  As we are in various mediums, out own permanent address go live from May 25th.  Lets IT job for everyone. thirstit.in/ Beta testers welcom...